Pages

Wednesday, December 30, 2009

கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? - ரான் ரெட்னூர்

மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.

முழுக்கட்டுரைகளுக்கும் காண்க: http://www.ronridenour.com/.

தமிழில்: அமரந்தா


“உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்... எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் எங்கள் சகோதரர்கள்” என்றார் ஃபிதல் காஸ்த்ரோ.

‘புரட்சிக்கான கருத்தியல் உந்து சக்தியாக விளங்குபவன் புரட்சியாளன். அவன் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை மறந்தால், அவன் வழிநடத்தும் புரட்சி, மற்றவர்களுக்கு உந்துதல் அளிக்கும் ஆற்றலை அறவே இழந்துவிடும். அவனும் சொகுசான செயலற்ற நிலையில் அமிழ்ந்துவிடுவான். இந்த நிலையை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாத நமது எதிரியான வல்லரசியம், நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உருவாக உழைப்பது நமது கடமை. அதே வேளை அது புரட்சிக்கான முன் நிபந்தனையும் கூட. இதைத்தான் நாம் நம் மக்களுக்குக் கற்பிக்கிறோம்’ என்று எழுதினார் சேகுவேரா.

இலங்கை இனவெறி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததன் மூலம் க்யூபா, பொலிவியா, நிகராகுவா அரசுகள்ள்ள்ள்ள் ‘சனநாயக சோசலிசக் குடியரசான’ இலங்கை வாழ் தமிழ் மக்களை மட்டுமல்லாது ‘பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும்’, ‘ஒடுக்கப்பட்ட மக்களையும்’ முற்றிலுமாகக் கைவிட்டு விட்டன. ‘லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான மாற்றுப் பொருளாதார அமைப்பைச்(Bolivian Alternative for Latin America -ALBA - ஆல்பா) சேர்ந்த கியூபாவும், பொலிவியாவும், நிகராகுவாவும் “மனித உரிமைகளைப் பேணி, பாதுகாத்ததற்காக” இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பில், 2009 மே 27ஆம் தேதி கையொப்பமிட்டன. இந்நாடுகள் 1983ஆம் ஆண்டு தொடங்கி 2009 மே 19 அன்று தோற்கடிக்கப்படும் வரை அரசுக்கு எதிராகப் போரிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ‘பயங்கரவாதத்தை’க் கண்டித்தன.

போரின் இறுதியாண்டில் இலங்கை அரசு சட்ட விரோதமாக, கொடூரமாக ஐந்து இலட்சம் தமிழர்களை கண்காணிப்புக் காவலில் வைத்தது. இவர்களில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பேர் புலிகள் சரணடைந்தபின், “நலவாழ்வு மையங்களில்” அடைத்து வைக்கப்பட்டனர். ஆறு மாதங்களுக்குப் பின்னர், சில ஆயிரம் பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும்” நிலைக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர்களின் நிலை - உணவும் தண்ணீரும் அடிப்படை சுகாதார வசதிகளுமற்று நூற்றுக்கணக்கானோர் இறந்து போய்விட்டனர்.

ஞாயமற்ற ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்து கையொப்பமிட்டார்களே தவிர ‘முற்போக்கு - புரட்சிகர - சோசலிச ‘ஆல்பா’ அரசுகளில் எதுவுமே, சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையோ, அடிப்படை வசதிகள் எதும் இல்லாதிருப்பதையோ சுட்டிக்காட்டி இலங்கை அரசை கண்டிக்கவே யில்லை.

இங்கிலாந்திடமிருந்து 1948- இல் விடுதலை பெற்றது முதல், சிங்களத் தலைமையிலான இலங்கை அரசு தமிழர்களை எப்போதும் முறை கேடாகவும், தாழ்வாகவும் நடத்தியதோடு, இனப்படுகொலை களையும் அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளது. இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வந்துள்ளதை நான் ஆதாரப் பூர்வமாக விளக்குகிறேன்.

இதில் தொடர்புடைய மேற்சொன்ன நான்கு ஆல்பா கூட்டணி நாடுகளும் உண்மையை புறக்கணித்ததோடு, இப்படுகொலை குறித்த விசாரணை ஏதும் நடை பெறாமல் தடுத்து, இலங்கையின் குரூரமான இனவெறி அரசுக்கு ஏன் ஆதரவு அளித்தன என்பதற்கான காரணங்களையும் ஆராய முற்படுகிறேன்.

சம உரிமைக்கான தமிழர்களின் போராட்டத்தையும், மேற்கத்திய நாடுகளும், அவற்றிற்கு எதிரான சீனா, ஈரான், ஆகிய நாடுகளுக்குமிடையே நடைபெற்று வரும் புவி அரசியல் அதிகாரத்திற்கான போட்டிகளையும் விளக்கி, இறுதியாக தமிழர்களின் இன்றைய நிலையைச் சொல்கிறேன்.

ஐ.நா. மனித உரிமை அமைப்புத் தீர்மானம் S-11/1: மனித உரிமைகளைப் பேணவும், பாதுகாக்கவும் இலங்கை அரசுக்கு உதவியளித்தல் போர் முடிந்த பின்பு, 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை அமைப்பின் 17 நாடுகள் இலங்கை நிலைமை குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டின. ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் நவீன்பிள்ளை, இலங்கை, உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களையும், ‘சுதந்திரமான நம்பகமான சர்வதேச ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்’ எனக் கூறினார்.

(நவீன்) பிள்ளையின் கடமையுணர்வும், இரக்கவுணர்வும் கொண்ட நடுநிலையான இந்த முன்மொழிவு சபையில் அனுமதிக்கப்படவோ, விவாதிக்கப் படவோ இல்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கெனடா, அர்கென்தினா, உருகுவாய், மெக்சிகோ, சிலே ஆகிய 17 உறுப்பு நாடுகள் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே முன்மொழிந்தன. அதாவது தனது மிருகத்தனமான நடவடிக்கைகளை இலங்கை அரசு தானே விசாரிக்க வேண்டும் என்ற பயனற்ற படு பிற்போக்கான யோசனையை முன்மொழிந்தன பெரும்பாலான அணிசேரா நாடுகள் ஐ.நா.வும், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும் (தமிழ் மக்களுக்கு) “உடனடியாக தங்கு தடையின்றி” மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

அணிசேரா நாடுகளுள் ஒன்றான சிலே மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக, ஆய்வு ஏதும் தேவையில்லை - உடனடியாக உதவிகள் வழங்க வேண்டுமென வாக்களித்தது. “உடனடியான தங்கு தடையற்ற” மனிதாபிமான உதவி என்பது பின்னர் “தேவைக்கேற்றவாறு உதவிகளைப் பெற வழி செய்வது” எனச் சுருங்கி பின்னர் அதுவே குடிநீர், உணவு, மருந்து ஆகியவற்றை ஆயுதங்களாக எதிரியின் மீது பயன்படுத்தும் உரிமையை இலங்கை அரசுக்கு அளித்தது. ஆம், இப்போது இலங்கை அரசின் எதிரி தமிழ் மக்கள் தான். தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அல்ல.

மேற்சொன்ன ஐ.நா. மனித உரிமை அமைப்புச் கூட்டத்தில் இலங்கை பார்வையாளராகக் கலந்து கொண்டது. 2006 முதல் ஆறு ஆசிய உறுப்பினர்களுள் ஒன்றாக அமைப்பில் உறுப்பு வகித்த இலங்கை, 2008இல் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது.

ஓராண்டு காலத்திற்குப் பின்னர், இந்த உண்மையை எளிதாக மறந்துவிட்டு, பெரும்பாலான அணிசேரா நாடுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்துவிட்டன.

ஆனால் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் உலகெங்கிலும் மதிக்கப் பெறும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செங்மாண் டுட்டு, அதால்ஃபோ பெரேஸ் எங்குய்வெல் ஆகியோரும் இலங்கை அரசை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“இலங்கை அரசப்படைகளின் திட்டமிட்ட அத்துமீறல்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கொடூரமானவை. சொந்த மக்களையே சித்ரவதை செய்து சட்டத்திற்குப் புறம்பாக எண்ணற்ற கொலைகளை செய்து வருகிறது” என்று கூறி 2008 மே மாதத்தில் மனித உரிமை அமைப்பில் இலங்கை இடம் பெறுவதை எதிர்த்து டுட்டூ பேசினார்.

ஓராண்டு கழித்து இதே மனித உரிமை அமைப்பு, இலங்கை அரசு தொடர்ச்சியாக ‘மனித உரிமைகளைக் காக்கும் கடமையையும் சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதாக, அதனை வெட்கமின்றி பாராட்டுகிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான இந்தத் தீர்மானத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க உதவிய நாடு நான் எட்டாண்டுக்காலம் தங்கியிருந்து அரசுப் பணியில் பங்கேற்ற நாடான எனது நேசத்திற்குரிய கியூபா என்பது தான் வேதனையளிக்கிறது.

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்பட்ட S- 11/1, தீர்மானம் 29 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

“ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கையின் இறையாண்மை, எல்லை, சுதந்திரம் இவற்றோடு நாட்டு மக்களைப் பாதுகாத்து, பயங்கரவாதத்தை எதிர்க்கும் தனி உரிமையையும் மதிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அதே வேளையில் பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தி அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிக்கிறோம்”

“இலங்கை அரசு ஐ.நா. அமைப்புகளின் உதவியோடு போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகளை குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள், உணவு, மருந்துகள், மருத்துவ சேவைகள் ஆகியவற்றை அளித்து வருவதால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்”

1. “போரினால் இடம் பெயர்ந்த மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம்”

2. “அனைத்து மனித உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதில் இலங்கை அரசின் கடப்பாட்டை வரவேற்கிறோம். மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதில் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் விதிகளைத் தொடர்ந்து கடைபிடிக்க ஊக்கம் அளிக்கிறோம்”

5. “போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச மனித நேய அமைப்புகளுக்கு அனுமதியளித்த இலங்கை அரசின் கட்டுப்பாட்டுணர்வைப் பாராட்டுகிறோம்”.

மேலே குறிப்பிடப்பட்ட 1, 2, 5 ஆகியவை உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை; இலங்கை அரசு தமிழ் மக்களையோ அவர்களது உரிமைகளையோ மதிக்கவில்லை. அவர்களது “உடனடித் தேவைகளை” நிறைவேற்றவும் இல்லை.

பயங்கரவாதமும் இனப் படுகொலையும்

1992ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ‘பங்கரவாத அமைப்பு’ என முத்திரை குத்தியது. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் 1997ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்த பின்பு தான் 1998ஆம் ஆண்டு இலங்கை அரசு புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என அறிவித்தது.

2006 மே 30 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடையும் விதித்தது. விடுதலைக்குப் பின்பான இலங்கை வரலாற்றில் தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துள்ளன.

1950ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று இலங்கை அரசு ஐ.நா.வின் வரைவுப்படி இனப்படுகொலையில் ஈடுபடுவதில்லை என உறுதி ஏற்றது. 1948 டிசம்பர் 9 அன்று நடந்த இனப்படுகொலை தடுப்பிற்கும், அக்குற்றம் இழைப்போரை தண்டிப்பதற்குமான ஜெனீவா மாநாட்டின் தீர்மானங்கள் 1951 சனவரி 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. அதன் விதி -II (5) பின்வருமாறு.
“எந்த ஒரு தேசிய இனத்தையோ, இனக்குழுவையோ, மரபினத்தையோ அலலது மதக்குழுவையோ முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்கத்துடன் கூடிய கீழ் வரும் அனைத்து செயல்பாடுகளும் ‘இனப்படுகொலை’ என இம்மாநாடு வரையறுக்கிறது;.

“தமிழினத்தை முழுமை யாகவோ அல்லது அதன் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும்” வேலையைத்தான் கடந்த அறுபதாண்டு காலமாக இலங்கையின் சிங்கள அரசுகளும், புத்தபிக்குகளும் செய்து வந்துள்ளனனர். இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

ரீகன் தலைமையிலான வட அமெரிக்க அரசின் உதவி அடார்னி ஜெனரலாக பணியாற்றிய புரூஸ்ஃபெயின் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய இராஜபக்சே மீதும் இராணுவத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சரத்பொன்சேகா மீதும் “தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்துவதாக” குற்றம்சாட்டி, கலிபோர்னிய மைய மாவட்ட நீதிமன்றத்தில் 2009 பிப்ரவரி மாதத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

கோத்தபய ராஜபக்செ வட அமொரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார். பொன்சேகா வடஅமெரிக்காவில் தங்கியிருப்ப தற்கான உரிமையளிக்கும் பச்சை அட்டையை வைத்துள்ளவர். எனவே இவ்விருவரின் பேரிலும் வட அமெரிக்காவில் வழக்குத் தொடுக்க முடியும். “சட்டத்திற்குப் புறம்பாக 3550 பேரை கொலை செய்தது, 10,000 பேர்களுக்கு உடலில் காயங்களை ஏற்படுத்தி துன்புறுத்தியது, 13 இலட்சம் பேரை வாழ்விடங் களிலிருந்து வெளியேற்றியது” ஆகிய குற்றங்களுக்காக இவ்விருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூன்று ஆல்பா உறுப்ப நாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இலட்சக்கணக்கில் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப் பட்ட தமிழர்கள் சிங்களர்களால் மிருகத்தனமாக நடத்தப்படுவதையும் தொடர்ந்து அவர்கள் பாரபட்சமாக இழிவாக நடத்தப்படுவதையும் ஆல்பா நாடுகள் அறிந்திருக்க வேண்டும்.

‘மொழி, மதம், பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அனைவருக்கும் சமஉரிமை’ என்னும் ஆல்பாவின் கொள்கைக்கு இது முற்றிலும் முரணானது. மிக அண்மையில் உருவாக்கப் பட்ட பொலிவியாவின் புதிய அரசியல் சாசனம், பொலிவியா வாழ் மக்கள் ‘எம்மதத்தவராயினும், எம்மொழி பேசுவோராயினும் அனைவரையும் மதிக்கும் பல்தேசியங்களின் நாடு’ என்று பிரகடனப்படுத்துகிறது.

வெனிசுவேலாவின் புதிய அரசியல் சாசனமும் இதனையே பிரகடனப்படுத்துகிறது. அப்படியிருந்தும், இத்தகைய மக்கள் அரசுகள் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற இனவெறி இலங்கை அரசின் கைகளில் வீழ்ந்துள்ளன. இலங்கை அரசை ஆதரிக்கும் வளரும் நாடுகள், தங்களது பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனவா?

சீனாவும் ஈரானும் வளரும் நாடுகளுக்குத் தேவையான மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் தந்து உதவுவதாலேயே அந்நாடுகளின் தவறான நிலைபாடுகள் கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லையா?

அவ்வாறிருப்பின் வளரும் நாடுகளின் இந்நிலைப்பாடு சோசலிசக் கருத்தியலுக்கும், மனிதநேயக் கோட்பாடுகளுக்கும் முரணானது. இந்நிலைப்பாடு அறநெறிகளுக்கு எதிரானது. அரசியல் ரீதியான அடிபணியாமல், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக் கொள்ள முடியாதா?

மற்றொரு பிரச்சினை மதச்சார்பின்மை. ஆல்பா நாடுகளும் உண்மையில் சோசலிசத்தை நோக்கிச் செல்லும் அரசுகளும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு மதத்தை அதுவும் ஒரே ஒரு மதத்தை மட்டும் தேசிய மதமாகவும் அரசின் மதமாகவும் அறிவித்துள்ள இலங்கை அரசை மதச்சார்பற்ற தேசிய அரசுகளும் அமைப்புகளும் எவ்வாறு “சனநாயக சோசலிச” அரசாகக் கருத முடியும்? மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் மட்டும் தான் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும்.

முடிவுரை

பல பத்தாண்டு காலமாக க்யூபாவையும், ஆல்பா நாடுகளின் உருவாக்கத்தையும் ஆதரித்து வந்துள்ள இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள முற்போக்குத் தமிழர்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ‘இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்’, தமிழ்நாட்டில் கியூபா, ஆல்பா நாடுகளுக்கு ஆதரவாக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. சேகுவேரா, ஃபிதெல்காஸ்த்ரோ உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்கர் களால் எழுதப்பட்ட புத்தகங்களை தமிழில் கொண்டு வந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை சபையில் ஆல்பா நாடுகளும், கியூபாவும் இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டு வந்த தீர்மானத்தைக் குறித்து அறிந்தபின், அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். கியூபா, ஆல்பா நாடுகளின் செயல்பாட்டைக் கண்டித்து அமரந்த்தா எழுதிய கடிதத்தின் ஒரு சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. அமரந்த்தா 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலத்தீன் அமெரிக்காவைப் பற்றிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சில நூல்களைத் தானே எழுதியுள்ளார்.

“தமிழருக்குச் சொந்தமான இலங்கை மண்ணில் தமிழினம் துடைத்தழிக்கப்பட வேண்டும் என இந்நாடுகள் விரும்பக் காரணமென்ன? தமிழினத்துக்கு எதிராகவும் இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் குரல் கொடுக்கும் கொடூரமான முடிவை எடுக்கும்படி இவர்களுக்கு இப்பிரச்சினை குறித்து பிழையான வரலாற்றுத் தகவல்களை அளித்தது யார்? இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககாக உயிர் நீத்த சர்வதேசியவாதியான மாவீரன் சேகுவேராவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் முன்னெப்போதைக் காட்டிலும் இக்கணத்தில் நம்மைத் திணறச் செய்கிறது”

http://www.greenleft.org.au/ எனும் இணையதளத்தில் கருத்துக்களை வெளியிடும் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய இடதுசாரி அமைப்பான ‘சோசலிசக் கூட்டணி’யின் (Democratic Socialist Perspective - DSP) கருத்துகளோடும் நான் உடன்படுகின்றேன். “கியூபா, வெனிசுவேலா, பொலிவியா உள்ளிட்ட புரட்சிகர இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உண்மை நிலையைத் தெளிவாக்கி, இலங்கை அரசுக்கு அவை அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை அங்கீகரிக்கச் செய்ய நாம் உறுதியேற்க வேண்டும்.

ஒடுக்குமுறை அரசுகளின் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற போலியான முழக்கத்தை நம்பி, மூன்றாமுலக நாடுகளிலுள்ள அசலான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் எந்தக் காரணத்திற்காக ஆதரிக்கத் தவறினாலும், காலப்போக்கில் அது புரட்சிகர அரசுகளுக்கும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்”

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Tuesday, December 29, 2009

அலைவரிசைப் பயன்பாடும் ஊழல் பண்பாடும் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)


அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட முதலாளியம், அவ்வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இலாப வெறியுடன் கூத்தாடுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தான், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஜி அலைவரிசைப் பயன்பாடு.

வடநாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே நடுவண் அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்புத் துறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அலைவரிசை சேவை, சென்னையில் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1860களில் உலகெங்கும் உள்ள தந்திச் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union- ITU) எனப்படுகின்ற அமைப்பு, தற்பொழுது, உலகளவில் மின்காந்த அலைவரிசைகளை தொலைத் தொடர்புப் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கும் அவற்றை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இவ்வமைப்பு, அலைவரிசைகளை அதன் தன்மையையும், பயன்பாட்டையும் வைத்து, அவற்றை ஒன்றாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என பிரிக்கின்றது. முதல் தலைமுறை என்பது கம்பியில்லாத் தொலைத் தொடர்புக் கருவிகளான வாக்கி - டாக்கி போன்ற கருவிகளின் செயல்பாட்டை உள்ளடக்கியது. இரண்டாம் தலைமுறை என்பது, நாம் இன்றைக்கு பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்பியில்லாக் கைபேசிக் கருவிகளைக் கொண்டது.

அவ்வகையில் “மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்” எனப்படுகின்ற Third Generation – 3G என்ற அலைவரிசைப் பயன்பாடு, நவீன வசதிகளைக் கொண்டதாகும். குரலொலிகளையும், குறுந்தகவல்களையும், படங்களையும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பரிமாறிக் கொள்ளும் வகையில் இருக்கின்ற, தற்போதைய இரண்டாம் தலைமுறை கைபேசி அலைவரிசைக்கு பதிலாக, இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வலிமை கொண்ட 3ஜி மூன்றாம் தலைமுறை அலைவரிசைக்கு மாற்றப்படும்.

இதன் மூலம் இனி இணையம், தொலைக்காட்சி, பேசுபவரை பார்த்துக் கொண்டே பேச வழிவகுக்கும் ‘ஒளிப்படக் கலந்துரையாடல்’ (வீடியோ கான்பிரன்சிங்) வசதி, போன்ற பல சேவைகளை நாம் கைபேசியிலேயே பெறலாம்.

இரண்டாம் தலைமுறை கைபேசிகள் பரிமாறிக் கொள்ளும் தகவலுக்கான இடத்தை(Space) இந்த 3ஜி அலைவரிசையின் மூலம், அதிகரிப்பதால், அதிகமானத் தகவல்களை நாம் பறிமாறிக் கொள்ள முடிகின்றது. எனவே தான், இந்த அலைசரிசையை வைத்து நன்கு சம்பாதிக்க இயலும் என்பதால் இவற்றை வாங்குவதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இவ்வகை புதிய அலை வரிசையை, உலகமய பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் விலை பேசவும், இதற்கான அனுமதி உள்ளிட்டவற்றை பேரம் பேசித் தரகு வேலை புரிவதற்கும், அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 10 பேரைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் நடுவண் அரசு நியமித்திருந்தது நினைவிருக்கலாம். இதில், திட்டக்குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் அடக்கம்.

நாட்டின் உணவு தானியக் கையிருப்பு குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை குறித்து விசாரிக்கவோ எந்த சிறப்பு அமைச்சர்க் குழுவையும் அமைக்காத இந்த அரசு, முதலாளிகளுடன் பேரம் பேச மட்டும் சிறப்பு அமைச்சர் குழுக்களை அமைக்கிறது.

இவ்வாறான, கைபேசி களுக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வதில் தான், நடுவண் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான இராசா, சுமார் 60,000 கோடி ரூபாய் பணத்தை ஊழல் செய்து சுருட்டியிருக்கிறார். ‘சுதந்திர’ இந்தியாவின் வரலாற்றில் இவ்வளவுப் பெரியத் தொகை சுருட்டப்பட்டது, இதுவே முதல் முறை என்ற போதும், தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் ஊழல்கள் இது ஒன்றும் புதிதல்ல.

கலாநிதி மாறன் குடும்பத்தினருக்கும், கருணாநிதிக்கும் இடையே தகராறு நிலவிய போது, மாறன் சகோதரர்களின் சன் தொலைக்காட்சி, தினகரன் இதழ் ஆகியவை இந்த ஊழல் குறித்து பெருமளவில் பெரிதாக செய்தி வெளியிட்டன. அமைச்சர் இராசாவும், தயாநிதி மாறன் பதவியில் இருந்த போது அரசுக்கு சுமார் 10, 000 கோடி நட்டம் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினார்.
முதலாளிகள் எப்பொழுதும், அவர்களைப் பாதுகாக்கும் முதலாளிய அரசு இயந்திரத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
இதன் பின்னணியில் தான் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சமரசம் ‘பேசி’க் கொண்டது, மாறன் குடும்பம். அமைச்சர் இராசாவின் அலைக்கற்றை ஊழலை, மாறன் குடும்பமும், ஊடகங்களும் அத்தோடு மறந்தன.

1980களில் பெரும்பாலும் கம்பிகளைக் கொண்டே இயங்கி வந்த தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இன்று கம்பியில்லா தொழில்நட்பமாக(Wireless Technology) முன்னேறி இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெறும் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமல்ல, உலகமய முதலாளிகளின் பணச் சுரண்டலுக்கான தேடலின் வளர்ச்சியும் கூட.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 52.56 கோடி மக்கள் தொலைபேசி, கைபேசி இணைப்புகளை பெற்றிருக்கின்றனர். மேலும், மாதத்திற்கு சுமார் 1 கோடிய 30 இலட்சம் புதிய கைபேசி இணைப்புகளை பெற்றுத் தரும் பெரும் சந்தையாக, இந்திய தொலைத் தொடர்புத் துறை சந்தை விளங்குகின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால், உலகமய நிறுவனங்களுக்கு இத்துறையில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகின்றன என்பது எளிதில் விளங்கும்.

1990களில் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில், இலாபத்தில் இயங்கிய அரசுத்துறை நிறுவனங்களை வெளிப்படையாக, முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது எப்படி என கண்டறிந்து, நடைமுறைப் படுத்துவதை, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. தொடங்கி வைத்தது. அப்பொழுது தான்,பெருமளவில் அரசே ஆதிக்கம் செலுத்தி வந்த தொலைத் தொடர்புத் துறையை தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் முறைகளைக் சட்டரீதியாகக் கண்டறிந்து, தொலைத் தொடர்புத் துறை ஊழல் முறைகேடுகளுக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.

உலகமயத்தின் வரவால், உலக வங்கி, பன்னாட்டுத் தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU), இந்திய முதலாளிகளின் அமைப்பு (CII) போன்ற பல்வேறு முதலாளிய அமைப்புகள் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடு என்ற பெயரில், தனியார்மயத்தை ஏற்படுத்த நடுவண் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன. இதன் பின்னணியில் தான், இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 74 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதை நாம்காண்கிறோம்.

நரசிம்மராவ், தனியார் தொலைத் தொடர்புத் துறையை முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிடுவதற்கு உதவியாக, 1994இல் ‘தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை’ (National Telecommunications Policy [NTP]) என்ற கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அப்போது நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம், வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை(சி.பி.ஐ) 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 3.61 கோடி ரூபாயை கட்டுக்கட்டாகக் கைப்பற்றியது.

விசாரித்ததில், இதனை அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சீத்தாராம் கேசரி தான் தம்மிடம் கொடுத்ததாக அப்பாவித்தனமாகக் கூறினார், சுக்ராம். இது குறித்து, சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையின் விளைவாக தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த, அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்ஸ்(Advanced Radio Masts - ARM) என்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு முறைகேடாக தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது. இந்த மோசடி நிறுவனத்தை நடத்துபவர் ஏற்கெனவே அமைச்சர் சுக்ராமுடன் இணைந்து ரேடியோ ரிலே சிஸ்டம்ஸ் Radio Relay Systems எனப்படும் தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் நடந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, தரகு வேலை பார்த்து வரும், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையம் (Telecom Regulatory Authority of India -TRAI) என்ற அமைப்பு, இதன் பின்னர் தான் 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் அரசின் இந்த ஊழல்களில், ‘பாடம்’ படித்த பா.ச.க., தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும் சட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்பொழுது நடுவண் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், இந்தத் தரகு வேலைகளின் மூலம் பெருமளவு முதலாளிகளை வசப்படுத்தி, கட்சிக்கு நிதித் திரட்டினார். ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இன்டிகாம் என தொடர்ந்து வடநாட்டு பன்னாட்டுத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சந்தை மட்டுமே இங்கு விரிவுபட வேண்டும் என்ற உள்நோக்குடன், அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியப் ‘பெருமை’, இவரையே சேரும்.

இக் காலகட்டத்தில் தான், அயல்நாட்டுத் தொலைபேசி அழைப்பு களை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் றுவனம் மோசடி செய்தது அம்பலமானது. இது கண்டுபிடிக்கப்பட்டு அந்நிறு வனத்திற்கு விதிக்கப்பட்ட சிறு அபராதத் தொகையும் கூட இரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு ஊழல்களைக் கடந்து தான், அதன் உச்சகட்டமாக அமைச்சர் இராசா நடத்திய சட்டப்பூர்வமான ஊழலும் நடந்தேறியிருக்கிறது. அமைச்சர் இராசா, திரும்பத் திரும்ப கூறி வருவது, நடந்தவை அனைத்தும் சட்டரீதியாகத் தான் நடந்தேறியுள்ளது, இவை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும் என்பதைத் தான். சட்டரீதியாகவே நடத்தப்பட்டுள்ள இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பங்குள்ளது என்ற அளவில் தான் அவரதுக் கூற்றை புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க.விற்கும், காங்கிரசிற்குமான அந்த புரிந்துணர்வு அண்மையில் கூட அம்பலப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக கருணாநிதி கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே, அமைச்சர் இராசாவின் அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறையினரால்(சி.பி.ஐ.) சோதனையிடப்பட்டது. அதன் பின்னர், நிலைமையை புரிந்து கொண்ட கருணாநிதி அக்கூட்டத்தை இரத்து செய்தார். ஆக, தி.மு.க.வின் இந்த அலைக்கற்றை ஊழல் குறித்து காங்கிரஸ் பேசாது. காங்கிரசின் அடாவடித்தனங்கள் குறித்து தி.மு.க.வும் பேசாது. இது தான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ராசா கூறும் ‘சட்டப்படியான’ இவ்ஊழல், நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள முறை நாம் அறிந்தது தான். பொதுப்படையான ஏலம் விடப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அலைவரிசைகளை, முதலில் வரும் நிறுவனத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், தனக்கென அலுவலகம் கூட இல்லாத போலி நிறுவனங்களுக்கான ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது, அமைச்சர் இராசாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.

இந்த அலைவரிசையை 2001ஆம் ஆண்டு என்ன விலைக்கு ஏலம் விட்டார்களோ அதே விலையில் தான் இப்பொழுதும் ஏலம் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சுமார் 60,000கோடி மதிப்புள்ள அலைவரிசைகளை வெறும் 3000 கோடிக்கு விற்றனர். தனக்கென சொந்தத் தொலைத் தொடர்புக் கருவிக் கூட இல்லாத நிறுவனங்களுக்கு தான் இதுவும் விற்கப்பட்டது. அலைவரிசையை பெற்றுக் கொண்டதைக் காரணம் காட்டி, அந்த போலி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை மட்டும் விற்று சுமார் 5500 கோடிக்கும் மேல் சம்பாதித்தன.

இந்த நிறுவனங்களின் பங்குகள் பலவும் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மக்களுக்கு வாரி இரைக்கப்பட்ட பணம், இவை போன்ற ஊழல் கொள்ளையிலிருந்து செலவு செய்யப்பட்டது தான் என்று நாம் ஊகித்தால் அது தவறல்ல.

தற்பொழுது, அரசுத்தறையின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3ஜி எனப்படுகின்ற இந்த புதிய அலைவரிசைப் பயன்பாட்டை வைத்து பெருமளவில் இலாபம் பார்க்க, பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனங்கள் அனுமதி வேண்டிக் காத்துக் கிடக்கின்றன. இந்த அனுமதிக்கான ஏலங்களிலும் நிச்சயம் ஊழல் நிறைந்திருக்கும் என்று நாம் சந்தேகமின்றி நம்பலாம்.

முதலாளிகளின் இலாப வேட்கை மக்களைக் குதறுகின்ற இந்நேரத்தில், மண்ணுக்கேற்ற மாற்றுப் பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியும், மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Sunday, December 27, 2009

இராஜபக்சே பொன்சேகா மோதல் - போர்ப் பொருளாதாரச் சூழலில் இலங்கை - ம.செந்தமிழன்


தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்டாடிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவு ரைவில் முடிவுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் துவங்கியுள்ள அதிகாரப் போட்டியில் சிங்கள அரசியலின் தன்னல வெறி அம்பலமாகிவிட்டது. இன அழிப்புப் போர் முடிந்த மறு கணத்திலிருந்தே சிங்கள இராணுவத்திற்கும் அரசியல் தலைமைக்குமான பனிப் போர் துவங்கியது. இந்தப் புகைச்சல் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

· சிங்கள இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

· கடைசிக் கட்டத்தில் தலைவர் பிரபாகரன் மற்றும் சில தளபதிகளை சிங்களக் கடற்படைப் பொறுப்பாளர்கள் சிலர் தப்ப வைத்தனர். இந்தக் குற்றச் சாட்டை வைத்து ஏராளமான சிங்கள வலைப் பதிவர்கள் மே மாத இறுதியில் எழுதித் தள்ளினர். குறிப்பிட்ட அந்தத் தளபதிகளை ‘இனத் துரோகிகள்’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.

· போர் வெற்றிக்குக் காரணம் இராணுவத்தின் செயல்பாடுகளே என்றும் அரசியல் தலைமையின் செயல்பாடுகளே என்றும் வாக்குவாதங்கள் எழுந்தன.

முதல் இரு குற்றச் சாட்டுகள் மீது ராஜபக்சே அரசு அவசர அவசரமாக நடவடிக்கைகள் எடுத்தது. இராணுவத் தளபதிகள் 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியே அறிவிக்காமல் படைப் பொறுப்பாளர்கள் பலர் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர்.

சரத்பொன்சேகாவின் திடீர் பிணக்கிற்கும்,அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஓரங்கட்டத் தொடங்கியதற்கும் மூன்றாவது காரணி கூறப்படுகிறது. தமிழக ஊடகங்களும் இந்தப் போக்கிலேயே இச்சிக்கலைப் பதிவு செய்கின்றன. ஆனால் இது ஒரு கண் துடைப்புக் காரணியே அன்றி உண்மையல்ல.

எந்தப் போர்ச் சூழலிலும் அரசும் இராணுவமும் முரண்களோடுதான் செயல்படும். வெற்றி அல்லது தோல்விக்கு இவ்வமைப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே பொறுப்பு என்பது போன்ற சித்தரிப்புகள் பொது மக்களிடையே முன் வைக்கப்படும். இது போர்ச் சூழல்களில் வழமையானதுதான். சரத் - ராஜபக்சே மோதலுக்கு இது மட்டுமே காரணமாயிருந்தால் இந்தச் சிக்கலை மிக எளிதாகத் தீர்த்திருக்க முடியும். சரத் பொன்சேகாவின் அதிகார வரம்பைக் குறைத்ததற்குப் பதிலாக அதிகரித்திருந்தால் இந்தச் சிக்கலகளுக்குத் தோற்றுவாய் இல்லாது போயிருக்கும்.

ஆனால் ராஜபக்சே அப்படிச் செய்யவில்லை. அவர் அப்படிச் செய்திருந்தாலும் சரத் பொன்சேகா போர்க் கொடி தூக்கியதைத் தடுத்திருக்க முடியாது என்பதே காரணம். சரத் பொன்சேகா அல்லது யாரேனும் ஒரு இராணுவ நபர் சிங்கள அரசியலில் போர்க் கொடி தூக்குவது இன்றைய சூழலின் கட்டாயம்.

எனது இந்தக் கூற்றை விளக்க, விரிவான சான்றுகளையும் உலகமயப் போர் பொருளியலையும் முன் வைக்க வேண்டியுள்ளது. புவி அரசியலும் போர்ப் பொருளாதாரமும் நாடுகளுக்கிடையிலான உறவுகள் நலன்கள் மற்றும் முரண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கோட்பாடு புவி அரசியல் எனப்படுகிறது. இந்திய - இலங்கை உறவில் இந்தியாவின் புவி அரசியல் என்பது தமிழின விரோதம் என்ற ஐயாயிரம் ஆண்டு கால ஆரியப் பகையின் தொடர்ச்சியாக உள்ளது.

ஆகவே, இந்தியாவின் புவி அரசியலைப் பொறுத்தவரையில் தனித் தமிழீழம் அமையவே கூடாது என்பதாகும். இக் கருத்து குறித்து தமிழர் கண்ணோட்டம் தொடர்ந்து எழுதி வருகிறது. போர்ப் பொருளாதாரம் குறித்த பார்வையையும், அது தமிழீழ மற்றும் சிங்கள அரசியலில் எவ்விதமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்ப்போம்.

பெருமுதலாளிய ஏகாதிபத்தியம் வளரும்போதே, போரும் அது சார்ந்த பொருளாதாரமும் வளர்ந்தன. நாடுகளைப் பிடிக்கவும் சுரண்டவும் ஏகாதிபத்தியங்களுக்குப் போர் அவசியமானது. போர் என்றால், பொது மக்களுக்கு - உயிரிழப்பு, உறுப்புகள் இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு. ஆனால், பெருமுதலாளிகளுக்கு - போர் என்பது கொள்ளையடித்துக் கொழுக்கும் நல் வாய்ப்பு. ஆயுத வணிகம், மறுசீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரும் சுரண்டல் நடப்பதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவது போர்ச் சூழல்.

ஆகவே, ஒரு நாட்டில் போர் நடப்பது அந்நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் அந்நாட்டின் மீதான ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் கொண்டாட்டமான சேதி. இன்றைய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரம் பேரளவுக்குப் போர்ப் பொருளாதாரமே என்று கருதத் தூண்டும் சான்றுகள் கிடைக்கின்றன.

இன்றைய நிலவரப்படி உலகம் முழுதும் போருக்காகச் செலவிடப்படும் தொகை 45 லட்சம் கோடி ரூபாய்! (1000 பில்லியன் டாலர்)! இவ்வளவு பணமும் பெருமுதலாளிகளின் பகாசுர கொள்கலன்களைத் தொடர்ந்து நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தொகையை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெரு முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். உலகம் முழுதும் போர் நடக்க வேண்டும், அதுவும் தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் இப்பெருமுதலாளிகளின் கொள்ளையில் குறைவு வந்துவிடும். ஆகவே எந்த நாட்டிலும் அமைதி திரும்புவதையோ சுமுகம் ஏற்படுவதையோ இவர்கள் விரும்புவதில்லை.

தீவிரவாதத்திற்கெதிரான போர், அமைதிக்கான போர், பிரிவினைவாதத்திற்கு எதிரான போர் என்றெல்லாம் இவர்கள் போர்களுக்குப் பெயர் சூட்டுகிறார்கள். உண்மையான பெயர் ‘ஏகாதிபத்தியர்கள் கொள்ளையடிப்பதற்கான போர்’ என்பதே.

போர்ப் பொருளாதாரத்தில் அமெரிக்காதான் முதல் குற்றவாளியாக உள்ளது. உலகின் மொத்த இராணுவச் செலவில் 48% பணம் அமெரிக்காவால் செலவிடப்படுகிறது. ஈராக், ஆப்கன், தென் அமெரிக்க நாடுகள் மீதான தனது வலிந்த இராணுவ நடவடிக்கைகளில் இப் பெரும் தொகையை அமெரிக்கா செலவிடுகிறது.

இவ்வளவு தொகையும் அமெரிக்க மக்களின் உழைப்பின் மீதான சுரண்டல் வழியேதான் அமெரிக்கா திரட்டுகிறது. சான்றாக, 2009 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நிதி நிலை அறிக்கையில், அந் நாட்டின் மொத்த வரி வருவாயில் 44.44% தொகை இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கென ஒதுக்கப் பட்டது வெறும் 2.2% மட்டுமே.அமெரிக்காவிலும் பிற ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள போர்ப் பொருளாதார முதலைகள் தமது ஆயுத வணிகத்திற்காக உலகெங்கும் போரைத் திணிக்கின்றனர்.

அமெரிக்கா இதன் தலைமை நாடாகச் செயல்படுகிறது. இச் சதியில் அமெரிக்கா தனது நாட்டு மக்களையும் சுரண்டுகிறது. அமெரிக்காவின் பங்காளி அரசாகச் செயல்படும் இந்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் இராணுவச் செலவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மன்மோகன்சிங்கின் இப்போதைய அமெரிக்கப் பயணத்தில் அமெரிக்காவிடமிருந்து பெருமளவிலான ஆயுதக் கொள் முதலுக்கான உடன்படிக்கை எட்டப்படுள்ளது. 'பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவதற்கான” ஒப்பந்தத்தில் ஒபாமா - மன்மோகன் சிங் கையெழுத்திட்டுள்ளனர். உண்மையில் ஆண்டுக்கு ஆண்டு ஆயுதக் கொள்முதல் செலவை அதிகரிக்கு மளவு எந்தப் போர்ச் சூழலும் இந்தியாவில் நிலவவில்லை. ஆயினும் இராணுவச் செலவை அதிகரிப்பதின் நோக்கம் போர்ப் பொருளாதாரச் சுரண்டலே ஆகும். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வாரிக் கொடுத்ததன் காரணங்களில், இலங்கைப் போரில் ஆயுத விற்பனை செய்து கொழிக்கும் நோக்கமும் ஒன்றாகும்.

ஆயுத நிறுவனங்கள் எப்போதும் போர் நடப்பதையே விரும்புகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். அவற்றில் முகாமையான ஆய்வு இது:

1. ஒரு நாட்டில் போர் குறித்த அச்சவுணர்வை ஊட்டுவதையும் போரில் வலிந்து ஈடுபடும்படியான அரசுக் கொள்கைகளை வகுப்பதையும் ஆயுத நிறுவனங்கள் தூண்டுகின்றன.

2. அதிகார வர்க்கத்தினருக்கு பெருமளவிலான இலஞ்சத் தொகை கொடுப்பதை ஆயுத நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

3. ஒரு நாட்டின் ஆயுதச் செலவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிற நாடுகளின் இராணுவம் மற்றும் கடற்படை குறித்த மிகை மதிப்பீட்டு அறிக்கைகளை ஆயுத நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.

4. மக்களிடைய தாங்கள் விரும்பும் செய்திகளை ஆயுத நிறுவனங்கள் பரப்பி விடுகின்றன. இதற்காக செய்தி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

5. ஆயுத நிறுவனங்கள் தமக்கென ஒரு சர்வதேச வளையத்தைப் பராமரிக்கின்றன.இதைக் கொண்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்படியான சூழலைத் தோற்றுவிக்கின்றன (I.W.Smith, The World’s wasted wealth-II-Institue for Economic Democracy, 1994 -P 224).

இந்தியா - பாகிஸ்தான் உறவில் எப்போதுமே போர்ச் சூழல் நீடித்து வருவதை மேற்கண்ட ஆய்வோடு பொருத்திப் பார்த்தால், இவ்வாய்வின் முக்கியத்துவம் விளங்கும். இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இருக்கும் பகைமைக்கான காரணம் மத முரண் மட்டும் அல்ல.

அது ஒரு அடிப்படைக் காரணி. அக் காரணியை எக் காலத்திலும் சரி செய்து சுமுகம் ஏற்படுத்திவிட முடியும். ஆனால், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் அப்படிப்பட்ட சுமுகத்தை விரும்புவதில்லை. இவ்விரு நாடுகளைக் கடந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் போர் பெருமுதலாளிகள் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் போர்ச் சூழல் நீடிப்பதையே விரும்புகின்றனர்.

இந்த ஏகாதிபத்திய பெருமுதலாளியச் சுரண்டலில்தான் காஷ்மீர் தேசிய இனத்தின் விடுதலை சிக்கியுள்ளது. இதே அடிப்படைதான் இலங்கையில் நீடிக்கும் போரிலும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான இனப் பகையில் இந்தியா இனவிரோதக் கண்ணோட்டத்துடன் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தமக்கான புவி அரசியல் நலன்களை முன் வைத்து தமிழருக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. அதேவேளை, இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ‘இலங்கையின் மீதான போர்ப் பொருளாதாரச் சுரண்டல்’ எனும் ரகசியத் திட்டமும் உள்ளது.

மேலே காட்டப்பட்ட பட்டியல் இலங்கை அரசின் இராணுவச் செலவு அதிகரித்த விதத்தைக் காட்டுகிறது. ‘இறுதிப் போர்’ என்று பெயரிட்டு சிங்கள அரசு நடத்திய போருக்கான செலவு மதிப்பீடு மட்டும் இந்தியப் பண மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய்! இலங்கைப் பண மதிப்பில் இது 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்!

‘விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம்’ என்று நாடு நாடாகச் சென்று சிங்கள ஆட்சியாளர்கள் கடன் வாங்கிப் போர் நடத்துவதன் பின்னணியில் பல ஆயிரம் கோடிப் பணத்தைச் சுரண்டும் கொள்ளை நோக்கமும் உள்ளது. அதேபோல் ‘தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போரை ஆதரிக்கிறோம்’ என்று ஏகாதிபத்திய நாடுகள் கடன், ஆயுத உதவி ஆகியவற்றை அள்ளிக் கொடுப்பதிலும் போர்ப் பொருளாதாரம் ஒளிந்திருக்கிறது.

மே 17 ஆம் நாள் ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று சிங்கள அரசும் இந்திய ஊடகங்களும் அறிவித்தன. ஆனாலும், அதற்குப் பிறகும் புதிதாக ஒரு லட்சம் படையினரைச் சேர்க்கப் போவதாக சிங்கள அரசு அறிவித்தது. சிங்கள - இந்திய சதிக் கூட்டணி தம்பட்டம் அடித்ததைப் போல் விடுதலைப் புலிகள் ஒழிந்துவிடவில்லை என்பதை இது உணர்த்தியது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான போரை உண்மையிலேயே ‘முடிவுக்குக் கொண்டு வர’ இச் சதிகாரக் கூட்டணி விரும்பவில்லை என்பதும் உண்மையே.

இலங்கைத் தீவு என்பது இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆயுத வணிகச் சந்தை. இந்தச் சந்தையை ஒரேயடியாக மூடிவிட இவர்களுக்கு மனமில்லை. பல்லாயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்றுப் போர்ப் பொருளாதாரத்தில் கொழுத்துச் சுகங்கண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ வல்லூறுகளுக்கும் போர் ‘ஒரேயடியாக முடிவதில்’ விருப்பமிருக்காது.

இனியும் இலங்கைத் தீவில் போர் நடக்கக் கூடாது என்று இவர்கள் உண்மையிலே விரும்பினால், தமிழீழ மக்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது வழங்கி அமைதிக்கான முயற்சியில் இறங்கியிருப்பார்கள். ஆனால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்து தமிழீழப் பகுதியில் கடுகளவும் இயல்பு நிலை திரும்பிவிடாமல், பதட்டத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் பராமரிக்கின்றது சிங்கள அரசு. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் இதற்குத் துணை நிற்கின்றன.

சிங்கள அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடன் கடன், கடன் மேல் கடன் என வாங்கிக் குவித்து ஆயுதக் கொள்முதல் செய்து சுய ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது ராஜபக்சே குடும்பம். சரத் பொன்சேகா உள்ளிட்ட இராμத் தளபதிகளும் அவரவர் வரம்பிற்கேற்ப போர்க் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான்.

கடந்த 30 ஆண்டுகளாக போர் நடந்த இடத்தில் திடீரென போர் நிறுத்தப்பட்டு ‘அமைதி’ நிலவத் தொடங்கினால், போர்ப் பொருளாதாரக் கொள்ளையர்களால் அதைச் சகித்துக் கொள்ள முடியுமா? பல ஆயிரம் கோடி ரூபாய்களும் டாலர்களும் புழங்கிய இடம் வெறும் அகதி முகாம்களால் நிரப்பப்பட்டால், ஆயுத வணிகர்கள் எப்படி அனுமதிப்பார்கள்?

விடுதலைப் புலிகள் இயக்கமோ உறங்கு நிலையில் உள்ளது. ஆகவே, இலங்கையில் போர் தொடந்து நடக்க வேண்டும் என்பது சிங்கள, இந்திய, அமெரிக்க, சீன சுரண்டல் அரசுகளின் மற்றும் சர்வதேச ஆயுத வணிகக் குழுக்களின் விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமக்கேற்ற சிங்கள தாதாக்களைத் தேர்ந்தெடுத்து இலங்கையில் அமைதியற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவே, சரத் பொன்சேகா - ராஜபக்சே மோதல்.

சரத் பொன்சேகா அமெரிக்கக் குடியுரிமை வைத்திருப்பதாலும், அவர் மீது ஏற்கெனவே போர்க் குற்ற வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் அவர் அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. அமெரிக்கா சரத் பொன்சேகாவை எளிதில் தன் கைப் பிடிக்குள் கொண்டு வர முடிந்ததற்கும் இவையே காரணங்கள். ஆனால், இவை அனைத்துமே ‘இலங்கையில் நிலையற்றதன்மையை நீடிக்கச் செய்தல்’ எனும் ஏகாதிபத்திய நோக்கத்தின் அடிப்படையில் தீட்டப்பட்ட சதித் திட்டங்கள். அவ்வளவே.

ராஜபக்சே சீனா பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் இந்தியா ராஜபக்சேவைத் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் ஊகங்கள் செய்திகளாக உலா வருகின்றன. சரத் பொன்சேகா அமெரிக்காவின் கையாளாக மாறிவிட்டதாக ஊடகங்கள் முμமுμக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே வேறு சில பெரும் நகர்வுகளின் மேல் தோற்றங்கள்.

புலிகளுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் அனைத்துமே ஒரே அணியில் செயல்பட்டவை. போர் முடியும் வரை இவைகளுக்குள் பிளவு இல்லை. இப்போது தெரியும் விரிசல்களும் தற்காலிகமானவையே. சிங்கள தேசத்தை ராஜபக்சேவும் அவருக்கு முன் ஆண்டவர்களும் ஓட்டாண்டி நாடாக மாற்றிவிட்டார்கள். சிங்கள தேசத்தின் சகல பகுதிகளிலும் பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களின் சூறையாடலை அனுமதித்து விட்டார்கள். சிங்கள தேசம் இனி ஒருபோதும் தற்சார்புடன் வாழ இயலாது. அது பல ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடு. அந்த ஏகாதிபத்தியங்கள் தத்தம் ஆதாயங்களுக்காக சிங்கள அரசத் தலைமையை இராணுவத்தை பகடை ஆடுவார்கள். சிங்களர்களுக்கு இதுவரை ஆயுதப் படியளந்த ஏகாதிபத்தியங்கள் இலங்கைத் தீவைச் சுரண்டுவதில் தமக்குள் போட்டி போடுகின்றன. அப் போட்டியில் அந்நாடுகள் தத்தமக்கான பகடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன.

அந்தப் பகடைகளின் தொடக்கமே சரத் பொன்சேகாவும் ராஜபக்சேவும்! ஆகவே, கொழும்பு அரசியல் நிலை குறித்த நமது பார்வை ஊடகங்கள் ஏற்படுத்தும் பொதுப் புத்தியிலிருந்து மாற வேண்டும். சரத் பொன்சேகா அல்லது ராஜபக்சே இருவரில் யார் வெல்லப் போகிறார்கள் அல்லது தோற்கப் போகிறார்கள் என்பது தமிழீழத் தேசிய அரசியலுக்கு நேரடித் தொடர்பில்லாதது.

இந்தச் சூழல் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினைகள் வேறு உள்ளன. அவற்றைக் காண்போம்.

புரட்சிகர இயக்கங்களும் தற்சார்பும்!

உலகெங்கும் புரட்சிகர இயக்கங்கள் தத்தமது ஏகாதிபத்திய அரசுகளுக்கெதிராகப் போராடிக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசையும் சர்வதேச போர்ப் பொருளாதாரக் கும்பல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இன அரசியல், வர்க்க அரசியல், புவி அரசியல் ஆகியவை அடிப்படை முரண்கள் என்பதை எந்தக் கணத்திலும் மறக்கவோ மறுக்கவோ கூடாது. அதேவேளை, இந்த அடிப்படை முரண்களைச் செயற்படுத்தும் போர்ப் பொருளாதார வலைப் பின்னலையும் ஆழமாகவும் தீவிரமாகவும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இன்றைய புரட்சிகர இயக்கங்களின் முன் உள்ளது.

உலகமயம் என்பது ஆயுத வணிகத்திலும் உள்ளது. பெப்சி, கோக் உள்ளிட்ட பண்டங்கள் எப்படி உலகமயப்படுத்தப்படுகின்றனவோ அதே போல, ஆயுதங்களும் பண்டங்களாகவே உலகச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

உலகமய எதிர்ப்பு என்பது உலகமய போர்களையும் எதிர்ப்பதே! இன நலன்களை முன்னிறுத்தும் புரட்சிகர இயக்கங்கள் சர்வதேச புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும். சர்வதேச புரட்சிகர இயக்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்றியமையாததாக உள்ளது.

அதேவேளை, ஒவ்வோரு புரட்சிகர இயக்கமும் தற்சார்புடையாதாக இயங்க வேண்டும். எந்தப் புரட்சியையும் யாரும் ‘வழங்க’ இயலாது. விடுதலை என்பது பொது எதிரி அல்லது குறிப்பான எதிரியிடமிருந்து மட்டும் விடுவித்துக்கொள்வது அல்ல. மாறாக, அனைத்து விதமான சார்புத்தன்மைகளையும் அறுத்து எறிந்த பிறகு கிடைப்பதே உண்மையான விடுதலை ஆகும். க்யூபா புரட்சிகர தற்சார் புடைய நாடாகவே அறியப்பட்டது. தமிழீழ மக்களின் உயிர் காக்கும் சிக்கலில் சிங்களத்தை ஆதரித்தபோதுதான் க்யூபாவின் தற்சார்புச் சாயம் வெளுத்தது. க்யூபா, புரட்சிகரத் தலைமையின் கீழ் செயல்படத் தொடங்கியபோதிருந்தே சோவியத் யூனியனின் ஆதரவில் இயங்கியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் சரிவைச் சரி செய்துகொண்டு மீண்டும் நிமிர்ந்து நிற்க க்யூபாவிற்கு சீனா தேவைப்பட்டது. இன்று இந்தியாவும் அதற்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் நிலையில் நின்று பார்த்தால், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைப் பகைத்துக்கொள்ளும் நிலையில் அது இல்லை. இது தமிழ்த் தேசியர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சான்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த நாட்டுடனும் சமரசத்திற்கு இணங்கவில்லை. ‘சீனாவுடன் புலிகள் இணங்கவில்லை’ ‘இந்தியாவைப் பகைத்துக் கொண்டார்கள்’ ‘அமெரிக்காவுடானாவது ஒத்துப் போயிருக்கலாம்’ என்றெல்லாம் ஆதங்கப்படும் போக்கு இன்று நிலவுகிறது. இது மிகவும் தவறான போக்கு என்பதோடு, விடுதலைப் புலிகளின் கோட்பாட்டு உறுதிப்பாட்டை இழிவு செய்யும் கருத்தும் ஆகும்.

ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கண்ட நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் ‘ஒத்துப் போயிருந்தால்’ அது தமிழீழ தேசத்தின் தற்சார்பை - இறையாண்மையை அடகு வைக்கும் செயலாவே அமைந்திருக்கும். சிங்கள தேசம் இன்று ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாறியிருப்பதன் காரணம் ‘ஆயுதம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பட்டுக் கம்பளம்’ என்ற விதத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்டதே ஆகும்.

சிங்களர்கள் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மண் இன்று அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது பன்னாட்டு பகாசுரர்களின் வேட்டைக் காடாகிவிட்டது. சிங்களர்கள் தமக்குள் சண்டையிடும் நிலை நேர்ந்துவிட்டது. பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து நொறுங்கியுள்ளது. கடன், சலுகைகள் இலவசங்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி சிங்கள நிர்வாகம் நடக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கலகம் உருவாகும் நிலை விரைவில் ஏற்படும். அதன் அடையாளமாகத்தான் வரிசையாக பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 2009 செப்டம்பர் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் சிங்களர் சிதறுவர் கட்டுரையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

”இலங்கையில் சிங்களக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முற்றி மோதல்கள் அதிகரிக்கும். போர்ப் பொருளாதாரத்தில் திவாலாகிப் போன இலங்கை அரசை எதிர்த்து மக்கள் கலகம் செய்வார்கள். சிங்கள இனம் தனக்குத் தானே முரண்பட்டு சீரழியும்”

நாம் நம்பிக்கைகொள்ள வேண்டிய தருணம் இது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தமது தமிழீழ அரசு இறையாண்மை உள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காகவே, கற்பனைக்கெட்டாத நெருக்கடிகள் வந்தபோதும் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் வளைந்து கொடுக்காமல் போராடினார். அவரது போராட்டம் மீண்டும் வெடிக்கும்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியர்களும் களமிறங்க வேண்டும். அது இன உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமும் கூட. ஆகவே, ‘புலிகள் தவறு செய்துவிட்டனர்’, ‘அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை’ என்று அவதூறு பரப்பும் எவரையும் உதறித் தள்ளுவோம். இப்படிப் பேசுபவர்கள் இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ தமிழீழ தேசத்தை அடகு வைக்கத் துடிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும் தலைவர் பிரபாகரனிடமிருந்தும் தமிழ்த் தேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ‘இனத்தின் இறையாண்மையை இழக்காமல் போராட வேண்டும். அதுவே உண்மையான விடுதலை’ என்பதே!

Friday, December 18, 2009

தலையங்கம் : முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 இதழ் தலையங்கம்)

இனி, வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற நடவடிக்கைகளால் முல்லை பெரியாறு உரிமையை மீட்க முடியாது. காரியம் கைமீறிப் போய்விட்டது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு சார்பாகச் செயல்பட்டபின், வேறு எங்கு வாதாடி நீதி பெறுவது?

27.2.2006-இல், 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்தது. அதை முறியடிக்க 15.3.2006 அன்று கேரள அரசு, “கேரளப் பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு” சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இச்சட்டம் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்த் தேக்கக் கூடாது என்றும் அவ்வணையின் முழுக்கட்டுப்பாடும் கேரள அரசுக்கு வந்துவிட்டது என்றும் கூறியது.

அப்போது கேரளத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தார். ஆட்சி நடத்திய காங்கிரஸ் கூட்டணியும், எதிர்க்கட்சியாயிருந்த சி.பி.எம். கூட்டணியும் ஒருமித்து இந்தச் சட்ட முன் வரைவை நிறைவேற்றின. பின்னர் ஆளுநர் கையொப்பமிட்டு அதைச் சட்டமாக்கினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்த இந்தக் கலகத்தை காங்கிரஸ் கட்சி, கம்யு+னிஸ்ட் கட்சிகள், கேரள அரசு, நடுவண் அரசின் முகவரான ஆளுநர் ஆகிய அனைவரும் சேர்ந்து நடத்தியுள்ளனர்.

இவ்வாறான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு நடவடிக்கையை இந்திய அரசின் மறைமுக ஒப்புதல் இல்லாமல், செய்து விட முடியாது. அவ்வாறு தனது தீர்ப்பை முறியடித்ததை உச்சநீதிமன்றம் மனமுவந்து அங்கீகரித்தது. இவ்வாறு நாம் கூறுவதற்கு உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளே காரணம்.

கேரளத்தின் மேற்கண்ட கலகச் சட்டத்தை எதிர்த்த தமிழக அரசு 31.3.2006 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது. அத்துடன் கேரளச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும்படி கோரியது. அதற்கு உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது?

இரு மாநில முதல்வர்களும் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி 29.11.2006 அன்று இந்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சைபுதீன்ஜோஸ் தலைமையில் புதுதில்லியில் தமிழக, கேரள முதலமைச்சர்கள் மற்றும் இரு மாநில அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பலனில்லை. தனது தீர்ப்பை அவமதித்த கேரளத்தின் மீது உச்சநீதிமன்றத்திற்குச் சினமில்லை.

வேறொரு நிகழ்வில் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது? சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி 2008ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தம் அறிவித்தார். மாநில முதல்வரே முழு அடைப்பு நடத்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்று கூறி அ.இ.அ.தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கடுங்கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். உடனே, பொது வேலை நிறுத்தத்தை உண்ணாப்போராட்டமாக மாற்றினார் கருணாநிதி. ஆனாலும், அரசுப் பேருந்துகள் ஓடவில்லை என்று அ.தி.மு.க. வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது ஆத்திரப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்று மிரட்டினார்.

அச்சப்பட்ட கருணாநிதி உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டுக் கோட்டைக்கு ஓடிப் போனார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முல்லைப் பெரியாறு வழக்கில், கேரள அரசைக் கண்டிக்கவில்லை உச்சநீதிமன்றம். சுமுகமாகப் பேசித் தீர்த்தக் கொள்ளச் சொன்னது.

இப்பொழுது இறுதியாக, ஐந்து நீதிபதிகள் கொண்ட விரிவடைந்த அரசமைப்பு ஆயத்திற்கு வழக்கை மாற்றிவிட்டது. ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? இந்திய ஆளும் வர்க்கம் தமிழ் இனத்தை எப்படி அணுக வேண்டும் என்று வரையறுத்துள்ளது. அதன் ஒரு பிரிவான உச்சநீதிமன்றமும் அப்படியே அணுகுகிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் காவிரி உரிமை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாலாற்றுச் சிக்கல், தமிழக மீனவர் உரிமை, கச்சத்தீவு உரிமை, முல்லைப் பெரியாற்று உரிமை, ஈழத்தமிழர் உயிர்க்காப்பு என எல்லாவற்றிலும் தமிழ் இனத்தைப் பகையினமாகக் கருதியே செயல்படுகிறது.

இப்படிப்பட்ட அனாதைச் சூழ்நிலை தமிழ் இனத்திற்கு இருக்கும் போது தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சி யு+ட்டி, நம் உரிமைப் பறிப்புகளை எதிர்த்தது. போராடும் ஈட்டி முனையாக விளங்க வேண்டும். ஆனால், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., கட்சிகள் அப்படிச் செயல்படுகின்றனவா? இல்லை.

எச்சில் இலைகளுக்காக ஒன்றையொன்று கடித்துக் கொள்ளும் பிராணிகள் போல பதவி, பணம் ஆகியவற்றிற்காக ஒன்றையொன்று கடித்துக் கொண்டு, தமிழ் இனத்தை இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் காட்டிக் கொடுத்து, காவு கொடுக்கும் வேலையைத்தான் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் செய்கின்றன.

இந்த இருகட்சிகளையும் உரித்து வைத்தது போல் புதிதாகப் பலகட்சிகள் தோன்றியுள்ளன. 2006 பிப்ரவரி 27இல் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது செயலலிதா முதலமைச்சர். அவர் உடனடியாக முல்லைப் பெரியாறு வடிகால் மதகுகளை இறக்கச் சொல்லி பொதுப்பணித் துறைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். அப்போது தண்ணீர் அந்த அளவு இல்லை என்று இப்போது சாக்குச் சொல்கிறார் அவர். தண்ணீர் அந்த அளவு இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

136 அடிக்கு மேல் திறந்து கிடக்கும் வடிகால் மதகை இறக்கிப் பு+ட்டினால், தண்ணீர் வரும் போது தேங்கும். 142 அடி உயர்ந்ததும் மிச்ச நீரைத் திறந்துவிடலாம். தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மாமூல் நிலையை(ளுவயவரள ஞரழ) உண்டாக்கியிருக்கலாம்.

அதன்பிறகு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வடிகால் மதகுகளை இறக்கி இருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. விளைவு என்ன? இப்பொழுது 10.11.2009 அன்று உச்சநீதிமன்றம் விரிவடைந்த அரசமைப்பு ஆயத்திற்கு வழக்கை மாற்றும் போது இரு தரப்பும் நடப்பில் உள்ள மாமூல் நிலையைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதன் பொருள் என்ன? வடிகால் மதகுகள் பதின் மூன்றையும் தமிழக அரசு கீழே இறக்கக்கூடாது என்பதாகும். தீர்ப்பு வந்த 2006-இல் செயலலிதாவோ கருணாநிதியோ, வடிகால் மதகுகளை இறக்கியிருந்தால் அது மாமூல் நிலை ஆகியிருக்கும்.

இதையெல்லாம் விடக் கொடுமை, 142அடி தேக்கலாம் என்ற தீர்ப்பை முடக்கிப் போட வழக்கை 5 நீதிபதி ஆயத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கேரளக் கோரிக்கையைத் தமிழக அரசு வழக்குரைஞர் ஏற்றுக் கொண்டது தான். தமிழக அரசின் ஒப்புதல் இன்றி வழக்கறிஞர் பராசரன் அவ்வாறு இசைவு தெரிவித்திருக்கமாட்டார். தமிழக அரசு ஒப்புதல் கொடுக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்காது.

தன் விருப்பப்படி பராசரன் இசைவு தெரிவித்ததாக இதுவரை, கருணாநிதி கூறவில்லை என்பதிலிருந்தே, அவர் கூறியதைத்தான், வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளார் என்பது உறுதியாகிறது. இனி முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க யாரை நம்புவது?

உச்சநீதிமன்றத்தை? உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை உச்சநீதிமன்றம் நீதிவழங்கினாலும் அதை செயல்படுத்துவது யார்?
இந்திய அரசு?
தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் அரசு.

தமிழக அரசு?
இனத்தை விற்று வாழும் கட்சிகளின் பிடியில்!

தமிழர்கள் தங்கள் ஆற்றலை நம்பிப் போராட வேண்டும்.

என்ன போராட்டம்?

1. மலையாளிகளையும் மலையாளி நிறுவனங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

2. கேரளாவுக்குத் தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் செல்லாமல் தடுக்க வேண்டும்.

ஆம். மலையாளிகள் “இனம்” என்ற ஆயுதத்தை வைத்து முல்லைப் பெரியாறு உரிமையை பறிக்கிறார்கள். நாம் அதே ஆயுதத்தை எடுக்க வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 இதழ் தலையங்கம்)

Friday, December 11, 2009

"மீனவனே மீன்பிடிக்காதே" - சாட்டை சுழற்றும் இந்தியா - பொன்னுசாமி


(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் நடத்திய கள ஆய்வு)

பாரம்பரியத் தொழில்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு கால் பிடிக்கும் இந்தியத் தலைமையின் பார்வை இந்தமுறை மீனவர்கள் மீது விழுந்திருக்கிறது. மீன்பிடித் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மீனவர்களின் பிழைப்பில் கடல் மணலை அள்ளிக் கொட்ட, ‘மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 2009’ என்று ஒன்றை கையில் எடுத்திருக்கிறது, மைய அரசு.

இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களை அலசினால் மயக்கம் வராத குறைதான். உண்மையில் இந்தச் சட்டத்தில் என்னதான் இருக்கிறது? இச்சட்டத்தை அமல் படுத்துவதில் இந்திய அரசின் நோக்கம் என்ன? மீனவர்கள், இச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று, தமிழகம் முழுவதும் பயணம் செய்து விவரம் சேகரித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர்.

ஒரு மாதத்துக்கு முன்பே இந்தச் சட்டமுன் வரைவை (மசோதா) இணையதளங்களில் வலைவிரித்திருக்கிறது, இந்திய அரசு. இது கடந்த வாரம்தான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதிலும் பெரும்பாலான மீனவர்களுக்கு இச்சட்டம் பற்றி இந்தத் தேதி வரையிலும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.

த.தே.த.க.குழுவினர் சென்ற பல இடங்களிலும் இந் நிலையைக் காணமுடிந்தது. நம்முடைய குழுவினர் இச்சட்டம் பற்றி எடுத்துச் சொல்லிய பிறகுதான் தேள் கொட்டியது போல் துடித்துப் போனார்கள், நம் மீனவத் தோழர்கள். இதில் இந்த ஊர் மீனவர்கள்; அந்த ஊர் மீனவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் என ஏறத்தாழ எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.

மீனவர்கள் அன்றாடச் செய்திகளை அசைபோடுவதில் கொஞ்சம் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். இதை அவர்களின் குறையாக கருதிவிட முடியாது. காரணம், மீனவர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் உடனுக்குடன் சென்று சேர்வதில் நிறைய இடர்பாடுகள் உள்ளன. மீனவர்களுக்கு செய்தி ஊடகங்களில் கவனம் செலுத்தும் அளவுக்கு நேரம் வாய்ப்பதில்லை.

ஆண்கள் எல்லாம் தொழிலுக்காகக் கடலுக்குப் போய்விட பெண்கள் மட்டுமே வீடுகளில், அல்லது மீன் வியாபாரத்தில் இருப்பார்கள். இணையதளம் போன்ற நவீன ஊடகங்களில் மீனவர்களின் பங்களிப்பு என்பதும் இன்னும் எட்டாத நிலையிலேயே இருப்பதும் இந்த விடயத்தை அவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம்.

இணையதளத்தில் வெளியான தகவல் ஆங்கிலத்தில் இருந்ததும் அதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து அதைப் பார்த்து, படித்துப் புரிந்து பின்னர் அதை மொழிபெயர்த்து கடைக்கோடி மீனவர்கள் வரை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம். அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் அபாயகரத்தை உணர்ந்து அதை மீனவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முயன்றதில் த.தே.த.க. குழுவினரின் பங்கு முக்கியமானது.

த.க.குழுவினர் பயணம் செய்த மீனவ கிராமங்களில் எல்லாம் அந்தச் சட்டத்தில் கூறியுள்ள பனிரெண்டு கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற விதியை மீனவர்களால் நம்பக் கூட இயலவில்லை. பனிரெண்டு கடல் மைல் என்பது ஏறத்தாழ இருபத்திரெண்டு கிலோ மீட்டர். இந்தப் பரப்பில் மீன்வளம் அறவே கிடையாது என்பது முதல் முதலாக நேற்று மீன்பிடிக்கக் கடலுக்குப் போன மீனவனுக்குக் கூட தெரியும் என்று, நம் குழுவினரிடம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஒரு காலத்தில் (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) ஐந்து கடல் மைல் பரப்பிலேயே மீன் கிடைத்திருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள், இறால் பண்ணைக் கழிவுகள் கடலில் கலப்பது போன்ற காரணங்களால் மீன்கள் ஆழ்கடலுக்குச் சென்று விட்டனவாம். விசைப் படகுகளின் இரைச்சலும் மீன்கள் ஆழ்கடலுக்குள் சென்றுவிட முக்கியக் காரணமாம்.

ஒரு படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று அந்தச் சட்டத்தில் உள்ள மற்றொரு விதி இருப்பதை நாம் சொன்னதும், ‘‘ஒரு விசைப் படகை எடுத்துச் சென்றால் டீசல் செலவே ஆறாயிரம் ரூபாய் வரை ஆகும். வலை வாடகை, ஆட்கள் கூலி என்று கணக்கைப் போட்டுப் பார்த்தால் பிடிக்கும் மீன்களுக்கான செலவு மட்டுமே பத்தாயிரத்தைத் தாண்டும். இது தவிர, ஒரு முறை இன்ஜின் பழுதானால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கூட செலவு பிடிக்கும். இதுதவிர எவ்வளவு மீன் கிடைக்கும் என்பது யாருக்கும் புரியாத மர்மம். இருபதாயிரத்திற்கும் கிடைக்கும், வெறும் நூறு ரூபாய்க்கு மட்டும் மீன்கள் கிடைக்கலாம்.

இந்த நிலையில், பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மட்டும்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்வது, மீனவர்களை மீன் பிடிக்கவே போகாதே என்று சொல்வதற்குச் சமம்’’ என்று த.க.குழுவினரிடம் தெரிவித்தார், வானவன்மாதேவியைச் சேர்ந்த மணி என்ற மீனவர்.

வெறும் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளாத நாகை மீனவர்கள், த.க. குழுவினரை விசைப் படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றனர். ஒன்பது கடல் மைல் தொலைவு சென்ற பிறகு மீன்பிடி வலையை விரித்தனர். அந்தப் பகுதியில் ஒரே ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. எனவே, இந்திய அரசின் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது தமிழக மீனவர்களை உள்நாட்டு அகதிகளாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

“அதே சமயத்தில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லும் இந்தச் சட்டம், உள்நாட்டு மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் பலியிடும் சடங்குதானே தவிர வேறில்லை” என்ற , தென்னிந்திய மீனவர் நலச்சங்கத் தலைவர் கு.பாரதி (சென்னை), த.க. குழுவினரிடம் மேலும் கூறியதாவது:

ஏற்கெனவே, 450 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஆந்திர மாநிலம் வரை சென்றால்தான் லாபகரமாக மீன்பிடிக்க முடியும். மீன்பிடிப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தொழில் முறை இருக்கிறது. ஆந்திர மீனவர்கள் பின்பற்றும் தொழில் முறையை நாம் பின்பற்றுவது கிடையாது.

சிங்கள கடற்படைதான் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. மீனவர்கள் யாரும் அடித்துக் கொண்டதில்லை. பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் உரிமையைப் பறித்து பெரிய பெரிய கப்பல் முதலாளிகளுக்குக் கொடுக்கும் முயற்சிதான் இது.

1981-ம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின்படி, அன்னியக் கப்பலின் ஊடுருவலைத் தடுக்கலாம். ஆனால் அதற்கு முன்பே இந்திய எல்லையில் நானூறு அந்நிய கப்பல்களுக்கு மீன்பிடி உரிமையை இந்திய அரசு வாரி வழங்கிவிட்டது.

இப்போது பாரம்பரிய மீனவர்களுக்குச் சிறையும், அன்னிய கப்பல் கம்பெனிகளுக்கு கட்டுப்பாடற்ற உரிமைகளையும் வழங்கியிருக்கிறது, இந்திய அரசு. ஏற்கெனவே உள்ள மீன்பிடித் தொழில் ஒழுங்கு சட்டத்தில் ரோந்துப் படையினர் தேவையான நேரங்களில் மீனவர்களின் படகுகளில் சோதனையிடவும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்தும் சட்டம் புதிதாகத் தேவையில்லை. ஏற்கெனவே இருப்பதே போதுமானது. புதிய சட்டத்தின் மூலம் மீன்வளத் துறையில் மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகளை இந்திய அரசுப் பறித்துக் கொள்ளும். பனிரெண்டு கடல் மைல் என்பது நம் மாநில கடல் எல்லைக்குள் வருவது. அதற்குமேல் மைய அரசின் கட்டுப் பாட்டிற்குச் சென்றுவிடும். மொத்தத்தில் இந்தச் சட்டம் மாநில உரிமைகளுக்கு வைக்கும் வேட்டு!

இந்தப் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரியிருக்கிறோம். மீனவர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து மீனவ மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றிவிடலாம் என்று அரசு நினைத்தால் அது நடக்காது. எந்த வடிவத்திலும் இந்தச் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து போராடுவோம் என்றார், கு.பாரதி ஆவேசமாக.

இந்தப் புதிய மீன்பிடிச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆறு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை தண்டத் தொகை விதிக்கப்போகிறது இந்திய அரசு. “இந்தச் சட்டத்திலேயே மிகவும் கொடூரமான பிரிவு இதுவாகத்தான் இருக்க முடியும். ஒரு விசைப் படகின் மதிப்பே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்தான். கடலோரக் காவல் படையினர் படகுகளைச் சோதனையிட்டு, விதி மீறல் நடந்திருந்தால் படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்து, ஆறு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பார்களாம். இப்படிப் படகைப் பிடுங்கிக் கொண்டு அபராதமும் விதித்தால் ஒரே ஒரு வழக்கில் அந்த மீனவரால் வாழ்நாள் முழுவதும் மீளவே முடியாத சுனாமி சிக்கலில் சிக்கிக் கொள்வார்’’ என்கிறார், அறிவழகன் என்ற வானவன்மாதேவி மீனவர்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன் பிடித் தொழிலை வெறுத்து ஒதுக்கும் விதமான சூழல் இப்போதே இந்திய தமிழக அரசுகளால் உருவாக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். சிங்கள கடற்படையினரின் அட்டூழியங்களால் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கே செல்லத் தயங்குவதாகவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அதேவேளை சிங்கள மீனவர்கள் இந்திய எல்லைக்குள், குறிப்பாக தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடித்துச் செல்கிறார்களாம். அப்படி எல்லை மீறி வரும் சிங்கள மீனவர்களைத் தமிழக - இந்திய அரசுகள் மாப்பிள்ளைகள் போல் நடத்துவதும், அவர்களது படகுகளுக்குப் பாதுகாப்பு அளித்து இலங்கைக்கு அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது. மீனவர்களிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக கடல் பகுதியில் அந்நியர்களின் ஆக்கிரமிப்பை இந்தப் புதிய சட்டம் அனுமதிக்கிறது என்றே மீனவர்கள் கருதுகிறார்கள். மீனவர்கள் கடலைத் தங்கள் தாயாகவும், தெய்வமாகவும் கருதுகின்றனர். பிற சமூகத்தினருக்கும் மீனவர்களுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தமக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொள்ளும் பழக்கம் மீனவர்களிடையே மிக மிகக் குறைவு. தங்களுக்குத் தேவையானவற்றை கடல் அள்ளிக் கொடுக்கும் என மீனவர்கள் நம்புகிறார்கள்.

படகுகளும், வலைகளுமே அவர்களின் சொத்துகள். கடலே அவர்களின் அட்சயப் பாத்திரம்! மீன்பிடித் தொழிலில் உயிர் ஆபத்து மிக அதிகம் இருப்பதாலும் கடின உடல் உழைப்புத் தேவை என்பதாலும் மீனவர்களிடையே குடும்பக் கட்டுப்பாடு என்பதே கிடையாது. அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்! ஒவ்வொரு மீனவக் குடும்பத்திலும் குறைந்தது ஐந்து குழந்தைகளாவது இருக்கும்.

புயல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காரணங்களால் மரணமும், உடல் ஊனமும் மீனவர் வாழ்வில் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் குடும்பத்தில் அதிக உறுப்பினர்களின் தேவை அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் இதுபோன்ற இடர்களை சமாளித்துக் கொண்டு, மீன்பிடித் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்பது அவர்களின் எதார்த்தம்.

வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயா சுப்பிரமணியனிடம் பேசியபோது, ‘‘மீனவர்களுக்குக் கடலில் ஏற்படும் ஆபாயங்களைக் களையவே கடலோரக் காவற்படை அமைக்கப் பட்டது. மீனவர் பதிவுகள், மீன்பிடி தொழிலைக் கவனிக்கும் மீன் வளத்துறையிடம் உள்ளது.

இச்சட்டம் மீனவர்களின் உரிமம் தொடர்பான பதிவு நடைமுறைகளை மீன்வளத் துறையிடமிருந்து பிடுங்கி, கடலோரக் காவல் படையினரிடம் கொடுக்கிறது. இது நடைமுறையில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். அதிகாரங்களைக் கடலோரக் காவற்படையிடம் ஒப்படைத்தால், மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை அப்படையினர் எப்படி செய்வார்கள்’’ என்று, த.க.குழுவினரைப் பார்த்துக் கேட்டார்.

தமிழ்நாடு மீனவர் இளைஞர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் செ.செரோன்குமார் (ராமேஸ்வரம்) த.க. குழுவினரிடம் கூறியது: மீனவர் நலம் சார்ந்த திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை. இணையதளங்களில் சட்ட மசோதாவை வெளியிட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இதைத் தாக்கல் செய்து சட்டம் ஆக்கிவிட இந்திய அரசு முயல்கிறது. ஏற்கெனவே ராமேஸ்வரம் தீவில் சிங்கள அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கும், கொலை வெறித்தாக்குதல்களுக்கும் சிக்கி, பிடித்த மீன்களை பறிகொடுத்துவிட்டு ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக கரை திரும்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் தமிழீழப் பகுதி இருந்தவரை தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்” என்றார், அவர்.

“உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் என்ற கொள்கைக்கு அடிபணிந்து இயற்கை சுற்றுலா வழங்கிய அன்னிய செலாவணி என்ற மாயையை நம்பி ராஜீவ்காந்தி கடந்த 19.02.1991 அன்று கடற்கரையின் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில், பன்னாட்டு உள்நாட்டு தொழில் நிறுவனங்களை திருப்திப்படுத்திட மீனவர் பயன்பாட்டுப் பகுதியை ஐநூறு மீட்டரில் இருந்து இருநூறு மீட்டராகக் குறைத்தார். கடல்மீன் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ 2009 சட்ட முன்வடிவு இதுவரை மீனவர்களின் கருத்துகளை அறிவதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. கடலும் அதன் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மீனவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்” என்றார், தமிழ்நாடு மீனவர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி (ராமேஸ்வரம்) மாநிலச் செயலர் முருகானந்தம்.

“கடந்த 1974 ஆம் ஆண்டில் மீனவர்களின் கருத்தை அறியாமலேயே கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது, இந்திய அரசு. அதன்பலனாக இதுவரை ஐநூறு மீனவர்களைப் பறிகொடுத்துவிட்டு தினம் தினம் சிங்கள கடற்படையின் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறோம்” என்றார், ராமநாதபுர மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், நம் மீனவர்களுக்குக் கடுமையான சட்டங்கள். இது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார், பாரத கடல் தொழிலாளர் மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஜான்.

ராமேஸ்வரத்தைப் பொறுத்த வரையில் பாம்பன், தங்கச்சி மடம், அக்காள் மடம் என மொத்தம் எழுபதாயிரம் மீனவக் குடும்பங்கள் உள்ளன. தமிழர் வரலாற்றில் மீன்பிடித் தொழில் குறித்த குறிப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானவை. சிந்துவெளியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் மீன்பிடித் தொழிலில் சிறந்தவர்கள் நம் தமிழர்கள் என்கிறது, வரலாற்றுக் குறிப்புகள். இந்தச் சட்டத்தால் இவ்வளவு நீண்ட பாரம்பரியம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும் அவலநிலை உருவாகிவிட்டது என்கின்றனர், தமிழறிஞர்கள்.

இதைத் தான் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் சந்தித்த மீனவர்கள், “மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே விவசாயம் பார்க்க ஒரு பிரிவினரும், மீன் பிடிக்க ஒரு பிரிவினரும் பிரிந்து சென்றனர். அப்போது கடலுக்கு வந்தவர்கள் தான் எங்கள் முன்னோர்கள். எங்கள் வேர்கள் இந்தக் கடலில் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. கடல்தான் எங்கள் நாடு. கடல்தான் எங்கள் பூர்வீகம். எங்கள் நாட்டிற்குள் எங்களை, ‘அங்கே போகாதே, இங்கே போகாதே’ என்று சொல்ல இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றனர்.

த.க.குழுவினர் மீனவக் கிராமங்களில் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பின்பு இரண்டு நாட்கள் கழித்துத்தான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை புதிய சட்ட மசோதாவை எதிர்த்து அறிக்கை விட்டனர். (மக்கள் நலனில் இவர்கள் காட்டும் அக்கறையை என்னவென்று சொல்வது?) அவர்களைத் தொடர்ந்து நம் முதல்வர் கலைஞரும் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் வேண்டும் என்று பொறுப்புடன் (!) அறிக்கை விட்டிருக்கிறார்.

புதிய சட்டம் குறித்து, மாநிலங்களவையில் (நவம்பர் 26) பேசிய கனிமொழி, திருச்சி சிவா போன்றவர்கள், ‘‘இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்’’ என்று, கலைஞரை வழி மொழிந்திருக்கிறார்கள்.

அப்படியென்றால், மறைமுகமாக இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஆதரிக்கிறது என்றுதானே அர்த்தம். ‘கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ முழுவதையுமே திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு காட்டும் மௌனம் இந்த அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக மீனவர்கள் எழுச்சி பெற வேண்டிய நேரமிது. மீனவர்கள் பிரச்சினையில் கட்சி கடந்து தமிழர்கள் ஒன்று சேரவேண்டிய காலமிது என்பதே த.க. குழு முன்வைக்கும் கருத்து!

தமிழர் கண்ணோட்டக் குழு:

அ.ஆனந்தன், முனி, குழ.பா.ஸ்டாலின், ரவி, பாண்டியன், மதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Friday, December 4, 2009

நிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க.. -பொன்னுச்சாமி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)


பாலியல் தொழில் செய்ததாக, அண்மையில் கைது செய்யப்பட்டார், நடிகை புவனேஸ்வரி. அவர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் திரைத்துறையில் பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பெயர் பட்டியலை சொன்னதாகக் கூறி அந்த நடிகைகளின் புகைப்படங்களுடன் தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. (புவனேஸ்வரி அப்படி கூறினார் என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரையிலும் ”தேசிய” ”நடுநிலை” நாளேடு தினமலர் சமர்ப்பிக்கவில்லை).இதில் நொந்து போன நடிகர் சங்கத்தினர் காவல்துறை ஆணையரிடம் தினமலர் நிர்வாகத்தினர் மீது கொடுத்த புகாருக்கு, தினமலர் சென்னைப் பதிப்பின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். நடிகர்களின் புகாருக்கு என்றைக்கும் ஒரு ‘மார்க்கெட்’ உண்டுதானே!

அத்துடன், நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் தங்களைப் பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகையாளர்களை நடிகர், `நடிகைகள் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

மறுநாளே, தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை யாளர்கள் கொதித்தெழுந்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோனதாக சாலை மறியலில் தொடங்கி, கண்டனத் தீர்மானங்கள் வரை நிறைவேற்றினர். ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கமும் லெனின் கைதைத் தவறு என்று கண்டித்தன.

அண்மைக் காலங்களில் பத்திரிகையாளர்கள் எந்த ஒரு சிக்கலுக்கும் இப்படி தங்கள் ஒற்றுமையைப் பதிவு செய்தது கிடையாது. பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் செய்தி திரட்டுவது வேண்டுமானால், செய்தியாளர்களின் வேலையாக இருக்கலாம். செய்தியாளர்கள் திரட்டித் தரும் அனைத்தும் பத்திரிகைகளில் வந்துவிடுவதில்லை.

இன்னின்ன செய்திகள் தான் வரவேண்டும், இந்தச் செய்தி இந்தப் பக்கத்தில்தான் வரவேண்டும், முதல் பக்கத்தில் இந்தச் செய்திதான் என்பதை எல்லாம் முடிவு செய்வது எல்லாம் பத்திரிகை முதலாளிகள்தான். உழைக்கும் பத்திரிகையாளர்களான செய்தி ஆசிரியர்கள், இணை, உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் இவர்களில் யாருக்கும் பணியில் சுதந்திரம் என்பதே கிடையாது. ஆனால் வெளியே பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்.

பத்திரிகை முதலாளிகளால் ஏற்கெனவே உட்புகுத்தப்பட்ட அரசியலைச் சார்ந்தே அவரின் கீழ் உழைக்கும் பத்திரிகையாளர்களின் சுதந்திரமும், கருத்தும், முடிவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. தினமலர் விடயத்தில், பத்திரிகை தவறு செய்திருப்பது உண்மை என்றால், அதற்காக அந்தப் பத்திரிகை முதலாளி மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே ஒழிய, எந்த சுதந்திரமும் இல்லாத பத்திரிகையாளர்கள் மீது தன் அதிகாரத்தை காவல்துறை காட்டியிருக்கக் கூடாது.

இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கருத்து, முதலாளிகளுடன் மோத எந்த அரசும் என்றைக்கும் தயாராக இருந்தது இல்லை. பத்திரிகையாளர்களும் பத்திரிகையாளர்கள் சங்கமும் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது விவகாரத்தில் உழைக்கும் பத்திரிகையாளர் மீதான நடவடிக்கையைத்தான் கண்டித்திருக்க வேண்டும். மாறாக, ஆதாரமின்றி அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கும், அதன் முதலாளிக்கும் ஆதரவாக செயல்பட்டிருக்கக் கூடாது.

பத்திரிகையாளர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்குமேயானால், பத்திரிகையாளர் முத்துக்குமார் மரணத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். செய்யவில்லையே? (ஒரு மாத இதழில் பக்க வடிவமைப்பாளராக வேலை செய்த முத்துக்குமார், பத்திரிகையாளரா என்று, கேட்ட பத்திரிகை யாளர்களும் உண்டு. பத்திரிகைச் சட்டத்தின்படி யார், யாரெல்லாம் பத்திரிகையாளர்கள் பட்டியலில் வருவார்கள் என்பது கூட பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை)

இந்தச் சிக்கலில் கருத்து, சுதந்திரம் பற்றி எல்லாம் பேசும் பத்திரிகையாளர்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சக பத்திரிகையாளனுக்கு அநீதி இழைக்கப்படும் போதோ, வேலை பறிக்கப்படும் போதோ அதை எதிர்த்துப் போராடும் துணிச்சல் வந்ததாக வரலாறு உண்டா? கேட்டுச் சொல்லுங்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அமைதி காத்த பத்திரிகையாளர்கள் அதே காலகட்டத்தில் சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே விக்ரமதுங்கே கொல்லப்பட்டதற்காக கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை பத்திரிகையாளர் சங்கத்தினர் நடத்தினார்கள். மோசமான விளைவுகள் நிகழும் என்று தெரிந்தே சிங்கள அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கட்டுரைகள் எழுதி வந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் திஸநாயகம் விசாரணையின்றி 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டார். (அமெரிக்க அதிபர் ஒபாமா திஸ நாயகத்தின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தார்)

வெகு அண்மையில் நடந்த பத்திரிகைச் சுதந்திரம் மீதான இந்த அடக்கு முறைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு கண்டனம் எதையும் தெரிவிக்க வில்லையே ஏன்?
இலங்கையில் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கை,கால்களைக் கட்டி சிங்களப்படையாட்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சி ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோலாட்சியை உலகிற்குக் காட்டியதே. அதை வெளியிட்டது யார் தெரியுமா? இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவிலாளர்கள் என்கிற அமைப்பு.

இந்த அமைப்பில் உள்ளவர்கள் எல்லாம் சிங்களப் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கருணாநிதியை ‘அய்யா’ என்றும், ஜெயலலிதாவை ‘அம்மா‘ என்றும் அழைக்கும் நம் பத்திரிகையாளர்கள் தங்களில் ஒருவரின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே முடிந்தவர்கள். வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால்?

இரு மாதங்களுக்கு முன் திருப்பூரில் தினமலர் நாளிதழில் திருப்பூர் மாநகராட்சிப் பற்றி வெளியான அவதூறு செய்திக்காக அந்த செய்தியை சேகரித்த நிருபரை மாநகராட்சி மேயர் செல்வராஜ் (திமுக) தாக்க முற்பட்டார். அந்த நிகழ்வைக் கண்டித்து திருப்பூர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தினமலரில் இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் கூட (மேயரால் அவமானப்படுத்தப்பட்ட நிருபர் உட்பட) கலந்து கொள்ள வில்லை என்பதில் இருந்தே அவர்களின் நேர்மையையும், துணிச்சலையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால், அப்படிப் பட்ட தினமலர் நாளிதழ் மீதான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் பிற பத்திரிகையாளர்கள் சங்கத்தைப் போல திருப்பூர் சங்கமும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றியது என்பதுதான் அதியற்புதமான நிகழ்வு. தினமலருக்கு ஆதரவாக களம் கண்ட தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களே, இனி உங்களில் யாரும் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசாதீர்கள்.

அடிமைகளாய் வாழ்வதிலேயே அகமகிழ்ந்து போகும் உங்களுக்கு எதற்கு ஒரு கருத்து, ஒரு சுதந்திரம்?

இப்படிப்பட்ட உங்கள் அகராதிப்படி நோக்கினால், மாவீரன் முத்துக்குமார் பத்திரிகையாளன் இல்லைதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(பின் குறிப்பு) நடிகைகளைப் பற்றிய அவதூறு செய்திக்கு மறுநாளே தினமலர் வருத்தம் தெரிவித்துவிட்டது. பத்திரிகையாளர்களை வசைபாடிய தற்காக சில நடிகர்களும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மொத்தத்தில் யாருக்குமே வெட்கம் இல்லை!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)




Thursday, December 3, 2009

சிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மாப்பிள்ளை விருந்து

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழிலிருந்து...)

ஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்சிங்கள மீனவர்கள் சென்னைக்கு அருகேயும், ஆந்திரப் பிரதேச எல்லைக்குள்ளும் மீன்பிடித்து அடிக்கடி கைதாகிறார்கள். அவ்வாறு அவர்கள் கைதாகும் போது சொல்லும் காரணம், திசை காட்டும் கருவி(GPS) பழுதாகிவிட்டது என்பதாகும். ஆனால், அக்கருவியை தமிழக அதிகாரிகள் சோதித்துப் பார்க்கும் போது அது நல்ல நிலையில் இருப்பது ஒவ்வொரு முறையும் தெரிய வந்துள்ளது.
ட்யு+னா என்ற மிக உயர்ந்த மீன் வகை சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்பகுதியில் அதிகமாகக் கிடைப்பதே சிங்கள மீனவர்கள் இப்பகுதிக்கு அடிக்கடி வருவதற்குக் காரணம். அது மட்டுமின்றி இங்கு அவர்கள் கைது செய்யப்பட்டால் மாப்பிள்ளை விருந்தும் உபசரிப்பும் நடக்கிறது.
ஆந்திரப்பிரதேச எல்லைக்குட்பட்ட கிரு‘;ணாம்பட்டினம் போன்ற பகுதிகளில் சிங்கள மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கைது செய்தாலும் அவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தான் அழைத்து வருகிறது. இங்கு அம்மீனவர்கள் கொண்டு வரப்பட்டவுடன், தமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்திலிருந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலையிடுவார்கள். சிங்கள மீனவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் விரைவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துவார்கள்.

அதன்படி, சிங்கள மீனவர்களுக்கு மரியாதையும் விருந்தும் விரைவான விடுதலையும் கிடைக்கும். இதே மீனவர்கள் ஆந்திரப்பிரதேச எல்லைக்குள் பிடிபட்டு சிலசமயம், அம்மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அங்கு அம்மீனவர்களுக்கு தலைக்கு 1 இலட்ச ரூபாய் தண்டத் தொகை வசூலித்துக் கொண்டு தான் விடுதலை செய்திருக்கிறார்கள். சென்னையை போல் மாப்பிள்ளை விருந்தும், மரியாதையும் அங்கு கிடைப்பதில்லை. இதனால் மனம் நொந்து போன இந்தியக் கடலோரக் காவல் படையினர் ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் சிங்கள மீனவர்களைக் கைது செய்தாலும் அவர்களை சென்னைக்கே கொண்டு வருகிறார்கள்.
ஆனால், தமிழகத்தின் தனு‘;கோடி அருகே மீன்பிடித்தாலும், பன்னாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடித்தாலும் அதுபற்றி இந்திய கடலோரக் காவல்படை, சிங்களக் கப்பற்படைக்குத் துப்புச் சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது. சிங்களக் கடற்படையினர் மழை பொழிவது போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே நம் மீனவர்களின் படகுகளை நெருங்குவார்கள். அஞ்சிக் கொலை நடுங்கிப் போகும் தமிழர்களை ஆடைகளைக் களையச் சொல்லி, அம்மணமாக்கி, துப்பாக்கிக் கட்டையால் அடித்து, பிடித்துள்ள மீன்களையும், வலைகளையும, அவர்களது ஆடைகளையும் கடலில் வீசிவிடுவார்கள். ஒரு மீனவரின் ஆண்குறியை இன்னொரு மீனவரை பிடிக்கச் சொல்லி அடிப்பார்கள். அம்மணமாகவே அவர்களைத் தமிழகக் கரைக்கு விரட்டுவார்கள்.

சிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மரியாதை கிடைக்கிறது. தமிழக மீனவர்கள் வெளியே சொல்ல முடியாத வகையில் மானக்கேடு அடைகிறார்கள். உயிரிழப்பிற்கும் பொருளிழப்பிற்கும் உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்திய ஏகாதிபத்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கையும், தமிழகக் கங்காணி அரசின் இனத்துரோகமுமே ஆகும். இந்த அட்டூழியங்களை தடுக்க மீனவர்கள் மட்டும் போராடினால் போதாது. ஒட்டுமொத்த தமிழகமே போர்க்கோலம் பு+ண வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழிலிருந்து...)

Tuesday, December 1, 2009

ஆனந்த விகடனின் ஆரிய வெறி - வில்லவன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)


ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.

”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது. “வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.

வீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின. ஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.

ஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல.

அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.


அப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது?


உங்களுக்கு இங்கே என்ன வேலை? வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது? எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.

கல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது! ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்!

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)